×

மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடத்த யாரும் அனுமதி கேட்கவில்லை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை, ஏப். 7: மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடத்த யாரும் அனுமதி கோரவில்லை என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. மேலூர் அருகேயுள்ள நெல்லுகுண்டுபட்டியைச் சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும். திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சியும் நடத்தப்படும். கடந்தாண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஒரு கொலை நடந்தது. இதனால் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் , பாடல் நிகழ்ச்சி நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

ஆனால், குறிப்பிட்ட ஒருதரப்பினர் மட்டும் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரியுள்ளனர். இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பான அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை யாரும் மனு அளிக்கவில்லை என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

The post மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடத்த யாரும் அனுமதி கேட்கவில்லை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Manjuvirattu ,Melur ,Icourt ,Madurai ,Manchuvirattu ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...